Pages

பெரியார் தாசன் @ அப்துல்லாஹ்: புழக்கடையில் போர்க்கருவி!


கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் சவூதி அரேபியா
தலைநகரான ரியாதில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பேராசிரியர் பெரியார் தாசன், அங்கு இஸ்லாம் மார்க்கத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மார்ச் 12 ஆம் நாள் ரியாதில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அதை பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். பின்னர் புனித மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றினார்.

இறைவனின் புனித மண்ணில் வெள்ளுடைத் தரித்தவராகத் தோன்றிய பெரியார் தாசன், தம்மை ஒரு முஸ்லிமாக பிரகடனம் செய்த காட்சி அனைவரையும் அதிரச் செய்தது. அவரது மனமாற்றம் தமிழகத்தில் மிகப்பெரும் விவாதப் பொருளானது. இந்துத்துவ வாதிகள் அவரை எரிச்சலோடு பார்த்தனர். இறை மறுப்பாளர்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கினர். பணத்துக்காக பெரியார் தாசன் பாதை மாறிவிட்டார் என்று பெரியாரிஸ்டுகளே வசைபாடினர். பெரியார் தாசனை உரிமை கொண்டாடுவதற்கு முஸ்லிம் அமைப்பினர் முண்டியடித்தனர்.

ஒரு தனி மனிதரை மைய்யப்படுத்தி ஏன் இத்தனை பரபரப்பு? ஒவ்வொரு நொடியும் மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்த ஒற்றை மனிதரின் மாற்றத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? ஆளுமைகள் பலர் வந்த போதெல்லாம் ஏற்படாத சலனம், இந்த ஆள் வந்த போது மட்டும் ஏன் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்குப் பின்னால் இருக்கிறது பெரியார் தாசனின் பன்முகம்.

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.

சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.

பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.

ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.

பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'கருத்தம்மா' எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.

இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான 'புத்தரும் அவர் தம்மமும்' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

'தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது' எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.

'பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்' என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், கடந்த ஆண்டு அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.

பெரியார் தாசன் அப்துல்லாவாக பரிணாமம் பெற்று ஓராண்டு ஆகிவிட்டது. அவர் இஸ்லாத்திற்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை, மிகவும் பரபரப்போடு காணப்படுகிறார். அவரது அலைபேசி பெரும்பாலும் அனைத்தே வைக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டில் இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. எப்போதாவது அவர் தொலைபேசியை எடுத்து விட்டால் ஏதோ ஒரு வெளியூரில் நிகழ்ச்சியில் இருப்பதாக சொல்கிறார். வயதையும், முதிர்ச்சியையும், உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் வெளிநாடுகள், வெளியூர்கள் என்று பம்பரமாக சுற்றிவருகிறார். அவரது பெரும்பகுதிப் பொழுதுகள் பயணத்திலேயே கழிந்து வருகின்றன. அவர் செல்லாத நாடுகளும் இல்லை; சுற்றாத ஊர்களும் இல்லை எனும் அளவுக்கு தினமும் கூட்டங்களுக்கு செல்கிறார்.

கடந்த ஓராண்டாக இவ்வாறு அவர் பயணித்துக் கொண்டிருப்பது முஸ்லிமல்லாத பொதுத்தளத்தில் என்று நினைத்தால் நீங்களும், நானும் ஏமாளிகள். ஏனெனில்,இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே பிசியாக இருக்கிறார்.

இது அப்துல்லா என்கிற ஆளுமையின் தவறா? அல்லது அப்துல்லாவைத் தவறாகப் பயன்படுத்துகின்ற முஸ்லிம் சமூகத்தின் தவறா? என்றால், முழுக்க முழுக்க இது முஸ்லிம்களின் தவறே. ஏனெனில், அப்துல்லா ஒரு போர்க்கருவி. அந்தக்கருவியை பொதுக் களத்திலும், அறிவுத் தளத்திலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் புழக்கடையில் போட்டு வைத்திருக்கிறது தமிழ் முஸ்லிம் சமூகம்.

முரசொலி அடியார் இஸ்லாத்தை தழுவிய போது அவர் அறிவுத் தளத்திலேயே பயணித்தார். சிந்தனையாளர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து தமது மனமாற்றத்திற்கான காரணங்களை எடுத்துரைத்தார். மனம் மாறியதால் தமக்குக் கிடைத்த சமூக அந்தஸ்த்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். சாதியக் கொடுமைகளுக்கு இலக்காகித் தவித்த தலித் கிராமங்களுக்குச் சென்று சமத்துவ இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார்.

அடியாரின் பரப்புரைகள் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுவுடமை இயக்கங்களிலும், சாதி ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்த கொடிக்கால் செல்லப்பா போன்றவர்களை ஷேக் அப்துல்லாவாக மாற்றியது. 1980 களில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வதற்கு அடியார் அப்துல்லாவை சரியான முறையில் பயன்படுத்திய சமூகம், இன்றைக்கு ஏனோ பெரியார்தாசன் @ அப்துல்லாவை மட்டும் தனக்குள்ளேயே சுற்ற வைத்திருக்கிறது.

பெரியார் தாசன் இஸ்லாத்திற்கு வந்ததை முஸ்லிம் சமூகம் பெருமிதத்தோடு கொண்டாடுகிறது. அவரை வரவேற்று தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இறை மறுப்புக் கொள்கைக்காக முழங்கிய பெரியார்தாசன், இஸ்லாத்தின் சிறப்புகளை விதந்தோதுகின்ற அப்துல்லாவாக உருமாறி உரையாற்றுவதைக் கண்டு முஸ்லிம்கள் பூரிக்கின்றனர். அப்துல்லாவின் அனுபவத்தை உள்வாங்கி மனதில் உரமேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு அது ஒரு வாய்ப்பு என்றாலும்,அதுவே அன்றாடக் காட்சியாகிக் கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முஸ்லிம்களுக்கு வகுப்பெடுக்க வேண்டியிருக்கிறது.

இன்று அறிவுத் தளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு, அதிகார வர்க்கம், ஊடகம்,கல்வி, கலை,இலக்கியம்,பண்பாட்டுத் தளம் என எங்கும் எதிலும் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த நிலையில் இஸ்லாத்தின் தத்துவங்களை வெகுமக்களுக்குச் சொல்லவும், முஸ்லிம்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை உடைக்கவும் வலுவான கருவிகள் நமக்குத் தேவைப் படுகின்றன.பல் துறைகளிலும் ஆழங்கால் பட்ட கருவிகள் நமக்கு அவசியமாகின்றன.

அந்த வகையில் பெரியார்தாசன் எனும் கருவி நாம் தேடிச் செல்லாமலேயே நம்மைத் தேடி வந்திருக்கிறது. பன்முகத்திறன் கொண்ட அந்தக் கருவியை சரியான திசையில் பயன்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

அளப்பெரும் சிந்தனைகளை அள்ளித் தெளித்து, கூர்மையாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனால் மட்டுமே நிகழாத சமூக மாற்றம், மக்களை ஈர்க்கும் பேச்சாளனால் நிச்சயம் நிகழும். ஏனெனில்,பேச்சு எளிதில் மக்களை வசீகரிக்கும். பேச்சு விரைவாக மக்களை சென்றடையும். வாசிப்பவர்களால் மட்டும் தான் எழுத்தை உள்வாங்க முடியும். ஆனால், கேட்பவர்கள் அத்தனை பேருக்கும் பேச்சு சென்றடையும்.அதுவும் பாமரனுக்கும் புரியும் படியான பெரியார் தாசனின் எளிய பேச்சு மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்துத்துவத்தை தோலுரித்து, மக்கள் கலை இலக்கியக் கழக மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பெரியார்தாசன் பேசிய பேச்சு ஈடு இணையற்ற பேச்சாகும். தத்துவத்துறைப் பேராசிரியரான அவரால் மட்டுமே அப்படியொரு உரையாற்ற முடியும் எனும் அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்திய பேச்சாகும். இப்போது பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறி விட்டதால் இனி ம.க.இ.க வினர் அவரை கூட்டங்களுக்கு அழைக்க மாட்டார்கள். இந்துத்துவத்தை பொதுத் தளத்தில் நின்று கூர்மையாக எதிர்கொண்ட பெரியார்தாசனுக்கு இனி அந்த தளங்களிலிருந்து அழைப்புகள் வராது. இத்தகைய சூழலில் அந்தத் தளத்தை அவருக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

இந்துத்துவத்தைக் களத்தில் எதிர்கொள்ள முஸ்லிம்களிடையே ஏராளமான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளுமைகள் எவரும் இல்லை. அந்தப் போதாமையை போக்க வந்திருப்பவர் தான் பெரியார் தாசன் என்கிற பேருண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பன்மைச் சமூகத்தில் இஸ்லாமின் செய்திகளை
எடுத்துச் சொல்வது ஒரு கலை. அந்தக் கலையைக் கற்றவர்களால் மட்டுமே அதைத் திறம்படச் செய்ய முடியும். பன்மைச் சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்பவர்களுக்கு, முதலில் பல சமூகங்களைப் பற்றிய ஆழமான பார்வை வேண்டும். பல் சமயத் தத்துவங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பிற சமயத் தத்துவங்களோடு இஸ்லாம் எப்படிப் பொருந்திப் போகிறது என்பதையும், எங்கெல்லாம் தனித்து விளங்குகிறது என்பதையும் எடுத்துச் சொல்லி பிற சமய மக்களை ஈர்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இலங்கை அறிஞர் ஸனீர் சொல்வதைப் போல,
தமிழ்ச் சூழலில் இஸ்லாத்தை சொல்ல வேண்டுமெனில் தமிழிலக்கியங்களிலும், தமிழ்ச் சமயக் கோட்பாடுகளிலும் நிரம்பிக் கிடக்கும் ஏகத்துவக் கொள்கையை மேற்கோள் காட்ட வேண்டும். ஏகத்துவம் என்பது பழந்தமிழர் மரபு; அதைத்தான் இஸ்லாமும் போதிக்கிறது என்று ஒப்பீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு தமிழ் இலக்கியங்களையும், தமிழ்ச் சமய நூல்களையும் நன்கு புரிந்திருக்க வேண்டும். அத்தோடு இஸ்லாத்தையும் ஆழமாக அறிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம், வெற்று விவாதங்களை நடத்தி, 'பயான்' செய்யும் இயக்க முல்லாக்களால் முடியாத காரியம்.

அத்தகைய அறிவையும், புரிதலையும் கொண்ட ஒரே நபர் இன்றைய நிலையில் தமிழ் முஸ்லிம் சூழலில் பெரியார் தாசன் மட்டும் தான். அவருக்கு திருவாசகமும் தெரியும்; திருக்குர்ஆனும் தெரியும். அவருக்கு பாரதியாரையும் தெரியும்; பெருமானாரையும் தெரியும். அவருக்கு காரைக்கால் அம்மையாரையும் தெரியும்; கதீஜா அன்னையாரையும் தெரியும். எனவே பன்மைச் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய உரையாடலை நிகழ்த்துவதற்கு முஸ்லிம்கள் அவரை பயன்படுத்த வேண்டும்.

இஸ்லாம் குறித்து பெரியார் பேசியவற்றை இன்று எந்தப் பெரியாரிஸ்டுகளும் பேசுவதில்லை. 'இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து' என்று தீண்டாமை இழிவுக்கு தீர்வைக் காட்டிய பெரியாரின் கருத்தை எந்தப் பகுத்தறிவாளரும் இன்று பரப்புவதில்லை. பெரியார் பேசிய தத்துவங்களில் கடவுள் மறுப்பைத் தவிர, மற்றவை அனைத்தும் இஸ்லாத்தின் ஒளியில் அமைந்த உன்னதக் கோட்பாடுகள் என்பதை உரத்துச் சொல்வதற்கு இன்று எவரும் இல்லை.

'வழிபாடு செய்வதற்கு கட்டணம் கேட்காத ஒரு கடவுளை, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத ஒரு மதத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும்' என்று கேட்டவர் தந்தை பெரியார். மதங்களை எதிர்ப்பதையே தம் கொள்கையாகக் கொண்டு இயங்கிய பெரியாரால் எதிர்க்கப்படாத ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே என்ற உண்மையை இன்று எவரும் உரைப்பதில்லை.

இத்தகைய நிலையில் தான், பெரியாரை ஆழக்கற்ற பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். இஸ்லாம் குறித்து பெரியார் பேசியவற்றையும், இன்றைய பெரியாரிஸ்டுகள் பேசாமல் இருப்பவற்றையும் முஸ்லிம்கள் பெரியார் தாசன் மூலம் பேச வேண்டும். எழுத்துக்களாகவும், உரைகளாகவும், காட்சிகளாகவும் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்

இன்றைக்கு பிறசமய மக்களுக்கும்,இறை மறுப்பாளர்களுக்கும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் அழைப்புப் பணியில் பெரும் பின்னடைவு நிலவுகிறது. தஅவா எனப்படும் அழைப்பியல் தளத்தில் போதாமைகளும், குறைபாடுகளும் நீடிக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை தலித் மக்கள் தான் அதிக அளவில் இஸ்லாத்தை தழுவுகின்றனர். சாதிய கொடுமைகளிலிருந்து விடுபடவும், சமூக அந்தஸ்த்தை தேடியும் அம்மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கின்றனர். அவர்களுக்குரிய சமத்துவத்தை இஸ்லாம் அடுத்த நொடியே வழங்கிவிடுகிறது. ஆனால், சமூக ரீதியாகவும், பொருளாதார வகையிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து மதம் மாறி வரும் அம்மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முஸ்லிம்களாகிய நாம் வழங்குகிறோமா என்பதை ஆய்வு செய்யத்தான் வேண்டும்.

ஒரு தலித் கிராமம் இஸ்லாத்தை தழுவுகிறது என்றால் அந்த கிராமத்திற்கு முதலில் ஒரு பள்ளிவாசல் அவசியமாகிறது. அம்மக்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை அறிந்து கொள்வதற்கு ஒரு பயிற்சி மையம் தேவைப்படுகிறது. இஸ்லாமியக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கு நூல்களும், வெளியீடுகளும் வேண்டியிருக்கிறது. இவையனைத்தையும் தாண்டி அவர்களுக்கான வாழ்வியல் சிக்கல்களுக்கு வழிகாணவேண்டியிருக்கிறது.

ஒரு தலித், தலித்தாக இருக்கிறவரை அவரால் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடிகிறது. அரசின் சலுகைகள் அவருக்கு கிடைக்கிறது. ஆனால் அதே தலித் இஸ்லாத்திற்கு மாறுகின்ற போது அவரது ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளும் மறுக்கப்படுகிறது.

தலித்தாக இருப்பவர் அட்டவணைச் சாதியினராக அடையாளப் படுத்தப் படுகிறார். முஸ்லிமாக இருப்பவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராக அடையாளப் படுத்தப் படுகிறார். ஆனால், தலித்தாக இருப்பவர் முஸ்லிமாக மாறிவிட்டால் அவர் அட்டவணைச் சாதியிலும் இல்லை; பிற்படுத்தப் பட்டவராகவும் இல்லை என்ற நிலையை அடைகிறார். இஸ்லாத்தை தழுவுகின்ற தலித்துகள் எஸ்.சி யாகவும் இல்லாமல், பி.சி யாகவும் இல்லாமல் ஒ.சி யாக [இதர வகுப்பினர்] அடையாளப் படுத்தப் படுகிறார்கள். இதனால் தலித்துகளுக்கான உரிமையும் கிடைக்காமல், முஸ்லிம்களுக்கான உரிமையும் கிடைக்காமல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக அவர்கள் புறந்தள்ளப் படுகின்றனர்.

தலித்துகளை இஸ்லாத்தை நோக்கி அழைக்கவும், அம்மக்களுக்குத் தேவையான அடிப்படை அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் தஅவா பணியில் களமிறங்கிய சமுதாய அமைப்புகள் இத்தகையப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து தீவிரமாகக் களமாடி தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று பார்த்தால், அவர்களால் நிலைமை மேலும் மோசமாகியிருப்பதுதான் மிகப்பெரும் அவலம்.

அழைப்புப் பணிக்கு என்று சொல்லி பணவசூல் செய்யும் அமைப்புகள் அந்தப் பணத்தை முறையாக செலவிடுவதில்லை. வார்த்தைக்கு வார்த்தை தஅவா, தஅவா என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இயக்கங்களிடம் செயல்பாட்டளவில் தஅவா இல்லை. அரசியல் சமூகப் பணிகளில் ஈடுபடும் இயக்கங்கள் அவற்றை மட்டுமே முன்னிறுத்தினால் வசூலாகாது என்பதனால் பெயரளவில் தஅவா வையும் இணைத்துக் கொண்டுள்ளன. தஅவா வின் பெயரால் வசூலித்து விட்டு அதை வேறு வகையில் செலவிடுகின்றனர். தஅவா விற்காக வசூலிக்கப்படும் பணம் முழுமையாக அந்தப் பணிக்கு செலவிடப் பட்டிருக்குமானால் தமிழகத்தில் மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று ஆதங்கப் படுகின்றனர் மூத்த அழைப்பாளர்கள்.அமைப்புகள் தஅவா களத்தில் குதித்த பிறகு தஅவாவின் கண்ணியத்திற்கு பங்கம் நேர்ந்து விட்டது என்றும் அவர்கள் வேதனையடைகின்றனர்.

தொடக்க காலங்களில் 'இசாத்தே இஸ்லாம் சபை' உள்ளிட்ட சில மட்டுமே அழைப்புப் பணியில் ஈடுபட்டு வந்தன. அவர்களுக்குள் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், ஒரு அமைப்பு இன்னொரு அமைப்புடன் மல்லுக்கு நின்றதில்லை. அவரவர் வலிமைக்கு ஏற்றவாறு அமைதியாகவும், கண்ணியமாகவும் அவரவர் வழியில் அழைப்புப் பணியை முன்னெடுத்தனர்.

ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. ஒரு அமைப்பு வேலை செய்யும் இடத்திற்கு இன்னொரு அமைப்பு போனால் அங்கே அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. தஅவாவின் உயர்ந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் குழாயடிச் சண்டையில் ஈடுபடுகின்றனர்.

அமைப்புகளின் இத்தகைய தவறான அணுகுமுறைகளால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு அழைப்புப் பணி செய்யச் சென்ற ஒரு அழைப்பாளர், அங்கு ஒரு தலித் இளைஞரிடம் இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அந்த இளைஞர், 'பாய் நீங்க விரலை ஆட்டுற கூட்டமா, அல்லது நீட்டுற கூட்டாமா' என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாத்தின் தனித்துவத்தையும், மேன்மையையும் எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில், முஸ்லிம்களின் தவறான நடவடிக்கைகளுக்கு விளக்கம் அளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது என்று நொந்து கொள்கிறார், அந்த அழைப்பாளர்.

இஸ்லாத்திற்கு வந்தவர்களை உள்வாங்கிக் கொள்வதிலும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டிருப்பதாக ஒரு பெரும் மனக்குறை இஸ்லாத்தை தழுவியவர்களிடையே நிலவுகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, சமூகத்தில் பெரிய மனிதர்களாக அறியப்பட்டு பின்னர் இஸ்லாத்திற்கு வந்தவர்களையும் கூட முஸ்லிம் சமூகம் சரியான வகையில் உள்வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இஸ்லாத்தை தழுவிய ஆண்களுக்கு எளிதில் பெண் கிடைத்து விடுகிறது என்றும், இஸ்லாத்தை தழுவிய பெண்களுக்கு வாழ்க்கைத் துணை கிடைப்பதில் மிகப்பெரும் சிக்கல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாத்திற்கு வந்த பெண்களை பாரம்பரிய முஸ்லிம்கள் மணமுடிப்பது மிக மிகக் குறைவு என்றும், அதனாலேயே பல பெண்கள், நீண்டகாலம் காத்திருந்தும் வாழ்க்கைத் துணை கிடைக்காமல், வேறு வழியின்றி இஸ்லாத்தை விட்டு வெளியேறி தமது பழைய உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வதாகவும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. 1980 களில் இந்தியாவையே திருப்பிப் பார்க்கச் செய்யும் வகையில் மத மாற்றம் நிகழ்ந்த மீனாட்சிபுரத்தில் இத்தகைய திருமணப் பிரச்சனைக்காகவே பல பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வருகின்றன.

முஸ்லிம் ஆண்களைக் காதலித்து அதனடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவும் பெண்களுக்கு பிரச்சனையில்லை என்றும், இஸ்லாத்தைக் காதலித்து மதம் மாறுகிற பெண்களுக்கு பெரும் சிக்கல் தான் என்றும் கூறி வேதனைப்படுகிறார் ஒரு மூத்த அழைப்பாளர்.

முஸ்லிம்களின் இத்தகைய மோசமான அணுகுமுறைகள் இஸ்லாத்தின் உன்னதத் தத்துவத்திற்கே எதிரானதும், இஸ்லாத்தை ஆழக் குழி தோண்டி புதைக்கிற செயலாகும்.

இந்தியச் சூழலில் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்கிறவர்கள், தங்களின் வேர் எது என்பதை ஆய்வு செய்யக் கடமைப் பட்டுள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் பல தலைமுறைகளுக்கு முன்னர் வேறு வேறு சாதியினராக இருந்தவர்களே. இஸ்லாத்தை எடுத்தியம்ப இந்த மண்ணிற்கு வருகை தந்த இறைநேசச் செல்வர்களின் அழகிய அணுகுமுறையினாலும், வியாபாரம் செய்ய வந்த முஸ்லிம் வணிகர்களின் நேர்மையான நடவடிக்கைகளினாலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்கு வந்தவர்களாவர். அப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களாக மாறி விட்டாலும், அவர்களின் மனநிலையில் இந்த மண்ணிற்கேயுரிய பழைய சாதிய இறுக்கம் இன்னும் படிந்து கிடக்கிறது என்பதைத்தான் இன்றைய முஸ்லிம்களின் தவறான நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பிராமணச் சமூகம் தம்மைத் தவிர மற்ற இந்துக்கள் அனைவரையும் கீழ் நிலையில் வைத்துப் பார்ப்பதையும், அந்தச் சமூகத்தால் ஒடுக்கப்படுகிற நிலையிலுள்ள மற்ற சமூகங்கள் அனைத்தும், அது போன்றே தமக்கு அடுத்த நிலையிலுள்ள சமூகங்களிடம் நடந்து கொள்வதை நாம் பார்க்கின்றோம். பார்ப்பனர்கள் மற்ற இந்துக்கள் எல்லோரையும் ஒடுக்குவதையும், பார்ப்பனீயத்தால் பாதிக்கப்படுகிற தேவர்களும், வன்னியர்களும், பள்ளர்களும், பறையர்களும் ஒன்றிணைந்து பார்ப்பனீயத்தை எதிர்க்காமல் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது பாய்வதையும், தேவர்கள் பள்ளர்களை ஒடுக்குவதையும், வன்னியர்கள் பறையர்களை ஒடுக்குவதையும், பறையர்கள் எழுச்சி பெறுவதை பள்ளர்கள் விரும்பாததையும் நடைமுறையில் காண்கின்றோம். இதே மனநிலையில் தான் இஸ்லாத்தை ஏற்கனவே தழுவிய முஸ்லிம்கள், புதிதாகத் தழுவக் கூடிய முஸ்லிம்களிடம் நடந்து கொள்கின்றனர்.

முஸ்லிம்களின் இத்தகைய தவறான செயல்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்துத்துவ சக்திகளும், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும், 'இஸ்லாத்தில் இணைந்தாலும் ஏற்றத் தாழ்வு நீங்குவதில்லை' என்று பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை. நந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை. நாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.

ஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர். இந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.

எனினும், அவர்கள் அவ்வாறு தவறான பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக முஸ்லிம்கள் செய்கின்ற தவறுகளை நியாயப் படுத்துவதும், அதை அப்படியே மூடி மறைப்பதும், அது குறித்து ஒரு திறந்த விவாதத்திற்கும், சுய பரிசோதனைக்கும் முஸ்லிம்கள் தயாராகாமல் இருப்பதும், பிரச்சனையை மேலும் வளர்க்குமே தவிர ஒருபோதும் பிரச்சனையை தீர்க்க உதவாது.

இந்தியச் சூழலில் இஸ்லாத்தில் ஒருவரை சேர்ப்பதை விட, அவரைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அழைப்பாளர்கள் கூறுகின்றனர். அதற்குத்தான் அதிக அளவில் உழைப்பும், பொருளாதாரமும் தேவைப்படுவதாக அவர்கள் கோருகின்றனர்.

கிராமங்களில் சென்று அழைப்புப்பணி செய்வதற்கு போதிய ஆள்பலம் இல்லை என்றும், அதற்கான உறுதியான கட்டமைப்புகள் இல்லை என்றும், இஸ்லாத்திற்கு வந்தவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உருவாக்கப் படவில்லை என்றும் குறைபடுகின்றனர்.

அழைப்புப் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் ஏதாவது ஒரு ஊருக்குச் சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களிடம், 'நீங்கள் என்ன தொழில் செய்கின்றீர்கள்? உங்கள் வருமானத்திற்கு என்ன வழி? என்பன போன்ற கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்கிறார்களாம். அழைப்புப் பணி செய்கிறவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமைக்குரிய சமூகமே, இப்படி கேள்விகளைக் கேட்டு காயப்படுத்துவது பல அழைப்பாளர்களையும் மனச் சோர்வு அடையச் செய்துள்ளது.

ஒரு கிறிஸ்தவர் அழைப்புப் பணி செய்தால் அவரை எந்தக் கிறிஸ்தவரும் இது போன்று அவமதிப்பதில்லை. அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களை அம்மக்கள் 'புனிதப்பணி செய்யும் இறைப் பணியாளர்கள்' என்று சொல்லி மதித்துப் போற்றுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகத்திலோ இவற்றிற்கு நேர்மாறான அவலம் நீடிக்கிறது.

தமிழகத்தில் அழைப்புப் பணி செய்பவர்களிடையே எந்த விதமான உரையாடலும் இல்லை. அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. அழைப்பாளர்களிடையே சந்திப்புகள் இல்லை. வாழ்வாதாரத் தேவைகளுக்கு வழியற்ற நிலை தொடர்வதனால் பல மூத்த அழைப்பாளர்கள் இப்போது அழைப்புப் பணியே செய்வதில்லை. தஅவாவில் ஈடுபடுபவர்களுக்குள் உரையாடல் இல்லாததானால் எல்லோரும் ஒரே வேலையைச் செய்யும் அவலம் தொடர்கிறது. பணிகளைப் பகிர்ந்தளித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பணி செய்தால் தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். ஆனால், அதற்கான ஒருங்கிணைந்த மையமோ, தலைமையோ இதுவரை இல்லை.

ஏற்கனவே இஸ்லாத்தை தழுவிய கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ஏம்பல் தஜம்முல் முஹம்மத், பேராசிரியர் T.அப்துர் ரஹ்மான், டாக்டர் முனவ்வர்கான், TM.மணி என்ற உமர் முக்தார் போன்ற ஏராளமான ஆளுமைகளுக்குள் கூட உரையாடலற்ற நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து தலைநகர் சென்னையில் இயக்கச் சார்பற்ற ஒரு தஅவா மையத்தை நிறுவவும், தமிழகம் முழுவதும் அதன் கிளைகளை விரிக்கவும், அழைப்புப் பணியாளர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையை தொடங்கவும், அழைப்புப் பணியாளர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பின்தங்கிய நிலையிலுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து இறைப்பணி ஆற்றவும், இவற்றுக்கெல்லாம் தேவையான பொருளாதாரத்தை ஒருமுகப்படுத்தவும், தஅவாவுக்காக வசூலிக்கிற பணத்தை தஅவா பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும், தஅவா தளத்தில் அமைப்புகள் ஏற்படுத்தி வைத்துள்ள தவறான முன்னுதாரணங்களைக் களையவும் பெரியார்தாசன் போன்ற ஆளுமைகள் முன்வர வேண்டும்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களை பாரம்பரிய முஸ்லிம்கள் அணுகும் விதங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய பெரியார்தாசனால் முடியும். ஏனெனில், அவர் ஒரு மனோதத்துவ நிபுணர்.

அழைப்புப் பணியாளர்களிடையே நிலவும் அவநம்பிக்கைகளைப் போக்கி அவர்களை உளவியல் ரீதியாகத் தயார்படுத்தவும் பெரியார்தாசனால் முடியும். ஏனெனில்,அவர் ஒரு தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்.

அழைப்பியல் தளத்தில் எப்படி பேச வேண்டும்; எப்படிப் பேசி மற்ற மக்களை ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் புதிதாக உருவாகி வரும் இளைஞர்களுக்கும், ஏற்கனவே களமாடிக் கொண்டிருக்கும் மூத்தவர்களுக்கும் பேச்சுப் பயிற்சியளிக்க பெரியார்தாசனால் முடியும். ஏனெனில், அவர் ஒரு பேச்சுக் கலை நிபுணர்.

அவர் கடவுள் மறுப்பாளர்களுடன் உரையாடச் சரியான நபர். ஏனெனில், அவர் ஒரு முன்னாள் கடவுள் மறுப்பாளர்.

அவர் இந்துத்துவ வாதிகளுடன் உரையாடச் சரியான நபர். ஏனெனில், அவர் இந்துத்துவ தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர்.

அவர் புத்த பிக்குகளுடனும், கிறிஸ்தவ பாதிரிகளுடனும் உரையாடத் தகுதியானவர். ஏனெனில், அவர் பெளத்தத்தையும், கிறிஸ்தவத்தையும் நன்கு அறிந்தவர்.

அவர் ஆரியத்தை அறிந்தவர், பெரியாரியத்தைப் புரிந்தவர், அம்பேத்கரியமும், மர்ர்க்சியமும் கற்றுத் தெளிந்தவர். அந்தத் தளங்களில் நின்று உரையாடும் வல்லமை மிகுந்த ஒரே மனிதர்.

அவரை அந்தத் தளங்களில் பயன்படுத்துவதா, அல்லது அவரை அழைத்து ஊர் ஊராகக் கூட்டம் போட்டு 'பயான் நிகழ்ச்சிகள்' நடத்துவதா, என்பதை முஸ்லிம் சமூகம் முடிவு செய்யட்டும்.

[சமநிலைச் சமுதாயம் மார்ச் - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]


                       'சமரசம்' இதழில் வந்த அபத்தமான எதிர்வினை!


கட்டுரைக்கு பெரியார்தாசன் வரவேற்பு!